கரூர் அருகே ரயில்வே மேம்பாலத்தின் அருகில் ஆக்கிரமிப்பில் இருந்த குடியிருப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு காவல்துறை பாதுகாப்புடன் இடித்த அகற்றம்.
கரூர் - மோகனூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் வாங்கல் அருகே மாரிக்கவுண்டனூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மேம்பாலத்தின் வலது & இடது புறத்திலும் தார்சாலை போடப்படாமல் இருந்தது. இதனால், மேம்பாலம் அருகில் குடியிருப்பவர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, பயன்படுத்தி வந்தனர்.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரயில்வே மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றும் பணி இன்று நடைபெற்றது.
ஒரு ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள், சுற்றுச்சுவர்கள், கழிவறை, கட்டுமானங்கள் என சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன.
மண்மங்கலம் வட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், ரயில்வே மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில், வாங்கல் காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றப்பட்டன.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.