கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கள் இயக்க நல சங்கம் சார்பில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் தென்னை, பனையை காக்க வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள் இயக்க நல சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், கரூர் மாவட்ட தலைவர் பாலுகுட்டி, காங்கேயம் பொங்கலூர் வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து கள்ளுக்கு விதித்த தடையை நீக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கள்ளுக்கு ஆதரவு தெரிவித்து போராடும் போராளிகள், தற்போது கள்ளை இறக்கி சந்தைப்படுத்தி வருகிறார்கள். கள்ளுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.