வெங்கமேட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96 வது பிறந்த நாள் கொண்டாட்டம்.
தமிழ்திரை உலகில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1928-ல் விழுப்புரத்தில் அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார்.
தமிழ் திரை உலகில் பராசக்தி என்ற திரைப்படம் மூலமாக பிரபலமான சிவாஜி கணேசன், தமிழில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, மற்றும் செவாலியர் விருது போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.
நடிப்பின் சிகரமாகவும், நடிகர் திலகம் என்றும், மக்கள் மனதில் வாழ்ந்து வரும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இன்று 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பிறந்தநாள் கொண்டாட நிறுவிய பிளக்ஸ் பேனரில் உள்ள சிவாஜி கணேசன் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி, அன்னதானம் வழங்கி, நடனமாடி கொண்டாடினர் அவரது ரசிகர்கள்.
கரூர் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிவாஜிகணேசன் ரசிகர் மன்ற ரசிகர்கள் கருணாகரன், சங்கர், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆல் வாய்ஸ் சேகர் கலந்து கொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.