தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆயினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வப்போது கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்பவர்களை பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ள லாட்டரி விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் மகாமுனிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில், சின்னதாராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள வாய்க்கால் தோட்டம் என்ற இடத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும், சின்னதாராபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீராம் வயது 28 என்பவர், கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது.
பெட்டிக்கடையில் சோதனை இட்டபோது, 3 கள்ள லாட்டரி டிக்கெட்டுகளும், விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 8400-ஐ பறிமுதல் செய்தனர். மேலும், ஸ்ரீராம் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.