11கரூர் என். எஸ். என் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று (செப்.26) மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கல்லூரிக் காலத்தை படிப்பிற்கும் வாழ்க்கையின் உயர்விற்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கும் காலத்தில் கவனச்சிதறல்கள் இல்லாமல் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கல்விக்காக பொருளாதாரத்தை எந்த பெற்றோரும் சுமையாக கருதக்கூடாது என்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக உயர்கல்வி பயில்வதற்காக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே ஆகும்.
அந்த வகையில், இன்றைய தினம் 111 மாணாக்கர்களுக்கு ரூ. 6. 52 கோடி உயர்கல்வி பயில கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவு & சமூக வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்யும் இத்திட்டத்தை நன்கு பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென ஆட்சியர் தங்கவேல் வாழ்த்து தெரிவித்தார்.