அருமனை: மதுக்கூடத்தில் கொத்தனாருக்கு சரமாரி குத்து
பனச்சமூடு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் செறுவல்லூர் பகுதியை சேர்ந்த பாபு (47) என்ற கொத்தனார் மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மதுபானம் வாங்கிவிட்டு அதே மது கூடத்தில் மேல் தளத்தில் முகமது சலீம் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இருந்தபோது அவர்கள் கும்மாளம் இட்டு தள்ளாடியதாக தெரிகிறது. பின்னர் கீழ் தளத்திற்கு வந்தபோது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த பாபுவுக்கும், முகமது சலீமுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் ஆத்திரம் ஏற்பட்டு மூன்று பேரும் சேர்ந்து மது கூடத்தின் மேசையில் போடப்பட்டிருந்த டைல்ஸ் கல்லை உடைத்ததாக கூறப்படுகிறது. அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த மதுக்கடை உரிமையாளர் டைல்ஸ் கல்லுக்கு பணம் தர கேட்டு சலீமின் செல்போனை மதுக்கடை உரிமையாளர் பிடுங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்துக்கு பின் பாபு பாரில் இருந்து வெளியே வந்த போது, அங்கு காத்திருந்த முகம்மது சலீம் உட்பட நான்கு பேரும் சேர்ந்து பாபுவை கத்தியால் குத்தி உள்ளனர். பின்னர் முகமது சலீம் உட்பட 4 பேரும் அங்கு இருந்து ஓடிவிட்டனர். பாபுவை உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.