இரணியல்; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
குமரி இரட்டைக் கரை கால்வாயை தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் விட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்இன்று (அக்.,3) இரணியலில் உள்ள நீர் வளத் துறையின் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஆர். குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் என். எஸ். கண்ணன் துவக்கி வைத்து பேசினார். இதில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் மலைவிளை பாசி, ஆர். ரவி, என். முருகேசன், எஸ். விஜி, எஸ். எஸ். பிள்ளை, எஸ். மிக்கேல்நாயகி, ஆறுமுகம் பிள்ளை மற்றும் பாசனத்தார் சபை தலைவர் வின்ஸ் ஆன்றோ உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் நீர் வளத்துறையின் மாவட்ட செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் உமா, காவல் ஆய்வாளர் ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அக்டோபர் 10 தேதிக்குள் கால்வாய்களில் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு போராட்டம் பிற்பகல் முடித்து வைக்கப்பட்டது.