களியக்காவிளை அருகே மலையடி பகுதியை சேர்ந்தவர் விக்ரமன் (54) இவரது மகன் அனந்தகிருஷ்ணன் என்பவருக்கு இந்தியன் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக அதே பகுதியை சேர்ந்த சுரேந்திரன் மகன் வினு என்பவர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய விக்ரமன் ரூபாய் ஆறு லட்சம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து மூன்று மாதங்கள் ஆகிய நிலையில் கொல்கத்தாவில் ஹரிப்பூர் என்ற இடத்தில் மூன்று மாதம் பயிற்சி இருப்பதாக கூறி உள்ளார். அதனை நம்பி மகனை அனுப்பி வைத்துள்ளார். மூன்று மாதம் கழித்து பயிற்சி முடிந்ததாக சான்றிதழ் வழங்கி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வரை வேலைக்கான எந்த உத்தரவும் வரவில்லை. அதைத்தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை. மேலும் கேட்டபோது வினு சென்னை திருவான்மியூரை சேர்ந்த ராஜேந்திர சோழன் என்பவரிடம் பணத்தை கொடுத்ததாகவும், அவரிடம் கொடுத்த பணத்தை என்னிடம் கேட்டால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனை தொடர்ந்து விக்ரமன் இது தொடர்பாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்தார். அதன் பெயரில் பளுகல் போலீசார் ராஜேந்திர சோழன் மற்றும் வினு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.