திருவட்டாறு அருகே வீயன்னூரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடத்தின் ஒரு அறையில் நேற்று மாலையில் அலுவலர்கள் பணியில் இருந்தபோது திடீரென பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து அறைக்குள் வந்தது. இதை பார்த்தவுடன் அலுவலர்கள் பயத்தில் கூச்சலிட்டனர்.
உடனடியாக அக்கம்பக்கத்திலிருந்து மின்வாரிய அலுவலக ஊழியர்கள் ஓடி வந்தனர். அவர்களில் ஒரு ஊழியர் தனது செல்போனில் பாம்பை படம் பிடித்தார். இந்த நிலையில் ஊழியர்களை கண்ட பாம்பு இரண்டடி உயரத்தில் இருந்து பிடித்து ஆடியது. உடனடியாக தீயணைப்பு அலுவலகம் மற்றும் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறிது நேரத்தில் பாம்பு மெதுவாக அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் சென்று மறைந்தது.
இதனால் மின்வாரிய அலுவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து மூன்று மணி நேரம் கழித்து மாலை 7 மணி அளவில் வனச்சரக அலுவலர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பாம்பை காணாததால் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதனால் இரவில் பணியில் இருந்த ஒரு பெண் ஊழியர் உட்பட 2 பேர் பீதியுடன் அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.