குழித்துறை: 2 சிறுவர்களை காப்பாற்றிய முதியவர் ஆற்றில் மாயம்

79பார்த்தது
குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குழித்துறை சப்பாத்து பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் சப்பாத்து பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஆபத்தை உணராமல் தடுப்புகளை கடந்து, இன்று சப்பாத்து பாலம் வழியாக நடந்து விஎல்சி மைதானத்திற்கு விளையாட வந்து கொண்டிருந்தனர். 

அப்போது ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். இதனை அந்த பகுதியில் ஆற்றின் கரையோரம் குளித்து கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆற்றில் குதித்து சிறுவர்களை காப்பாற்றினார். ஆனால் முதியவர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணியில் குழித்துறை தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் யார்? எங்கிருந்து வந்தவர் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அவரை மீட்டால் மட்டுமே அவரை குறித்த தகவல்கள் தெரியவரும். தொடர்ந்து தேடும் பணி நடக்கிறது.

தொடர்புடைய செய்தி