குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் தவறி விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த பீட்டர் ஜான்சன் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று (04. 06. 2025) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தெரிவிக்கையில் -
கடந்த 01. 06. 2025 அன்று சுமார் காலை 11. 30 மணியளவில் தடுப்பணையில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ ( 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் ( 12) ஆகிய இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட பீட்டர் ஜான்சன் இரண்டு மாணவர்களின் உயிரையும் காப்பாற்றினார். ஆனால் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்துள்ள பீட்டர் ஜான்சன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவி உடனடியாக அன்னாரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என கூறினார்.