கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஏப்ரல் 1ஆம் தேதி நடக்கிறது.
தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ளும் குழந்தைகள் பெயர் பதிவு ஆன்லைன் மூலமாகவும் அலுவலகம் மூலமாகவும் நடைபெற்றது. இந்த வருட தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ள 1,175 குழந்தைகள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேர்ச்சையில் கலந்துகொள்ளும் குழந்தைகள் குடும்பத்தினர் வீட்டிலேயே தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளை வில்லில் வைத்துக்கொண்டு கோவிலை வலம் வரும் தூக்கக்காரர்கள் நேற்று முன்தினம் காலை முதல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆலய வளாகத்தில் தங்கி இருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இவர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நேற்று (மார்ச் 26) மாலை தூக்கக்காரர்கள் குளித்துவிட்டு மூலஸ்தான கோயில் சென்று விநாயகருக்கு தேங்காய் உடைத்துவிட்டு இரவு திருவிழா கோயில் வந்து, முட்டுக்குத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.