குலசேகரன்புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை சசிகலா என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: -
மணகுடியில் எனக்கு சொந்தமான இடத்தில் வீடு மற்றும் கடைகளை கட்டி வாடகைக்கு விட முடிவு செய்து எனது கணவரின் உறவினர் மூலம் 5 லட்சம் கடனாக கேட்டேன். அதன்படி கடந்த 22. 7. 2022 அன்று இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் அடமான பத்திரம் எழுதி, கடன் தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கு காசோலை தந்ததுடன் கையில் 19 ஆயிரம் ரூபாய் தந்தார். இந்த ரொக்க பணம் எதற்கு என கேட்டபோது அடமான பத்திரம் பதிவு செய்யவில்லை, அதற்கு பதிலாக கிரைய பத்திரம் போட்டு உள்ளோம். இதற்காக கடன் தொகை 6 லட்சம் கணக்கிட்டு உள்ளோம் என்று கூறினார்கள்.
நான் இதற்கு நான்கு சதவீத வட்டியை கட்டிய பிறகு கடன் முழுவதையும் திருப்பி செலுத்த சென்றபோது, சொத்தை எழுதி தர மறுத்ததோடு மேலும் 3 ஆண்டுகளுக்கு வட்டி தர வேண்டும் என மிரட்டினார்கள்.
இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததுடன், பத்திர பதிவை ரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இதனால் ஆத்திரமடைந்த வட்டி கும்பல் எனது வீட்டில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இது பற்றி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.