இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்றில் நான்கு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்குள்ள ஆலயம் முன்பு காரை நிறுத்திக்கொண்டு அந்தப் பகுதியில் வருவோரை வம்புக்கு இழுத்தனர். இவர்களது செயலால் அந்த வழியாக இரவில் டியூஷன் முடித்து சென்ற மாணவிகள், பெற்றோர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த கும்பல் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி இளைஞர்கள் அங்கு திரண்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் போதை கும்பல் காரில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டது. ஏற்கனவே இந்த பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கஞ்சா போதை வாலிபர்கள் அட்டகாசம் நடந்துள்ளது. அவர்கள் தாக்குதலில் காயமடைந்த வாலிபர் ஒருவர் நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் கஞ்சா போதை வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.