கடையாலுமூடு போலீசார் நேற்று மாலையில் களியல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாகனம் கடையாலுமூடு பகுதியில் உள்ள மாணவர்களை இறக்கிவிட்டு, அருமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ரதிஷ்குமார் (38) என்பவர் ஓட்டி சென்றார்.
போலீசார் வாகனத்தை சோதனைக்காக நிறுத்திய போது டிரைவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை சோதனை இட்டனர். அப்போது அவர் போதையில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பின் டிரைவரை பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனா. இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து வாகனத்தில் இருந்த நான்கு மாணவர்களை ஆட்டோ மூலம் பள்ளி ஆசிரியர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.