விவசாயி மீது திராவகம் வீச்சு அக்காள் தம்பிக்கு 7 ஆண்டு சிறை

56பார்த்தது
விவசாயி மீது திராவகம் வீச்சு அக்காள் தம்பிக்கு 7 ஆண்டு சிறை
குலசேகரம் அருகே உள்ள அஞ்சுகண்டரை பகுதியை சேர்ந்தவர் கிரிஜாகுமார் (72) விவசாயி. இவருடைய வீட்டின் அருகில் செல்லம்மாள் என்ற மரிய நேசம் (72),   அவரின் தம்பி நடராஜன் என்ற தேவசகாயம் (71) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே ஒரு வாழைத்தோட்டம் குத்தகைக்கு எடுப்பது சம்பந்தமாக பிரச்சனையில் முன் விரோம் இருந்து வந்துள்ளது.
      இந்த நிலையில் 17 -6 - 2009 அன்று மாலை 4: 30 மணிக்கு கிரிஜா குமார் தோட்டத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது வீட்டின் முன்புறம் வைத்து செல்லம்மாள், நடராஜன் ஆகியோர் கிரிஜா குமாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு,   செல்லம்மாள் கையில் சில்வர் பாத்திரத்தில் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கிரிஜா குமாரின் முகத்தில் வீசி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிரிஜா குமாருக்கு இடது கண் பார்வை பறிபோனது.
   புகாரின் பேரில் குலசேகரம் போலீசார்  செல்லம்மாள், நடராஜன் ஆகியோர் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை பத்மநாபபுரம் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி மாரியப்பன் குற்றம் சட்ட பட்ட செல்லம்மாள் என்ற மரிய நேசம் மற்றும் நடராஜன் என்ற தேவசகாயம் ஆகியோருக்கு தலாஏழு ஆண்டு சிறை தண்டனையும், தலா  ஐந்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.