நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலையில் குழி தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் செட்டிகுளத்தில் இருந்து இந்துக் கல்லூரி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழிதோண்டப்பட்டது.அதன் பிறகு அந்த குழிகள் மூடப்பட்டு சாலை போடப்பட்டது.இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே அந்த பகுதியில் சில இடங்களில் பள்ளங்கள் உருவானது. இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை கண்ணன்குளத்தில் இருந்து வடசேரி நோக்கி அரசு பஸ் வந்தது. காலை 9 மணிக்கு செட்டிகுளம் சந்திப்பு பகுதிக்கு வந்த போது சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் பஸ்சின் முன் சக்கரம் சிக்கியது. உடனே டிரைவர் பஸ்சை இயக்க முயன்றார். ஆனால் பஸ்சின் முன் சக்கரம் தொடர்ந்து பள்ளத்தில் புதைந்தது. மேலும் பஸ்சின் முன் பகுதியும் சாலையில் தட்டியதால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிலிருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளத்தில் பஸ் சிக்கியதால் அந்த அந்த பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்ததும்
போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகன நெருக்கடியை சரிசெய்தனர். மேலும் பள்ளத்தில் புதைந்த அரசு பஸ்சை மீட்பு வாகனம் மூலம் சுமார் ½ மணி நேரம் போராடி மீட்டனர். அதன்பிறகு அந்த பகுதியில் வாகன நெருக்கடி குறைந்தது. சாலையில் உள்ள பள்ளத்தில்அரசு பஸ்சின் சக்கரம் புதைந்தால்
போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பள்ளத்தை உடனே சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.