திங்கள்நகர் பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சுகன்யா என்பவர் நேற்று மாலை பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டு காலி குடங்களுடன் வந்த அவர் பேரூராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர் ஆரோக்கியபுரம் சேவியர் தெருவில் ஆழ்துளை கிணறு தோண்டி சிண்டெக்ஸ் அமைத்து சிறு மின் விசை திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆரோக்கியபுரம் அன்பின்நகர் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும். ஆரோக்கியபுரம் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி முன்பு மாணவிகள் பாதுகாப்பு கருதி 5 தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும்.
ஆரோக்கியபுரம் ஜார்ஜியார் குருடியில் இருந்து பட்டறிவிளை மிக்கேல் அதிதூதர் குருசடி வரை சாலையை பக்கச்சுவர் கட்டி கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கூறி அலுவலக வாசலிலேயே காலி குடங்களுடன் அமர்ந்திருந்தார். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.