கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ. பிரின்ஸ் குளச்சலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
குளச்சல் தொகுதியில் நிறைவேற்ற பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் அதிகமாக உள்ளது. கடலில் மீன் பிடிக்க செல்லும் குமரி மாவட்ட மீனவர்கள் காணாமல் போனால் அவர்களை துரிதமாக மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது மிகவும் அத்தியாவசியமானது ஆகும். அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும். குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகளை நிறுத்த போதுமான இட வசதியில்லை. எனவே துறைமுகத்தை 'போட் யார்டு' வசதியுடன் விரிவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. தூர்ந்து போன வெள்ளியாகுளத்தை தூர் வாரி நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும். குளச்சல் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி சிறப்பு சிகிச்சை மையமாக்க வேண்டும். குளச்சல் ஏ. வி. எம். கால்வாயை தூர் வார வேண்டும். பீச் சந்திப்பில் பழடைந்துள்ள தும்பு ஆலையை சீரமைக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பாரபட்சமாக இழப்பீடு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கடந்த கனமழையில் பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து உள்ளது. இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். குமரி மாவட்ட மக்களின் உயிர் நாடியான பேச்சிப்பாறை அணையை தூர் வாரி முழுமையான கொள்ளளவு நீர் தேக்கி நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும். மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள், ஏரிகளையும் தூர் வாரி சீரமைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த
96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படியை நிலுவை தொகையுடன் உடனே வழங்க வேண்டும். நாகர்கோவில், திருநெல்வேலி மண்டலங்களில் பணிபுரிந்து மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கடந்த 15 வருடமாக
வாரிசு பணி வழங்கப்படாமல் உள்ளது. தொழிலாளர்களின் வாரிசுகளின் நிலை குறித்து உடனே பணி வழங்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் காலை சிற்றுண்டி, மதிய உணவு திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற அரசு திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளின் சமூக செயல்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும். கடந்த 2011 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் பிறப்பித்த ஆணையை செயல்படுத்தி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு
அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வரும் சட்டமன்ற கூட்டத்தில் பேரவை விதி எண் 55 ன் படி வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில காங். செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மீனவர் காங். துணைத்தலைவர் பிரான்சிஸ், மாவட்ட காங். துணைத்தலைவர் அந்திரியாஸ், செயலாளர் சத்யன், மாவட்ட மீனவர் காங். தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின் மற்றும் அப்துல் ரகீம், ஷாபி ஆகியோர் உடனிருந்தனர்.