மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் நேற்று மாலை அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாகோடு மதில் குளத்து விளை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சேம் (46) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சேமை கைது செய்தனர். அவரை மார்த்தாண்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, அவர் கேரளாவில் சிலரிடமிருந்து கஞ்சா பொட்டலத்தை வாங்கி வந்ததாகவும் அவற்றை குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்ய வந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.