மணவாளக்குறிச்சியில் பைக் மோதி தொழிலாளி பலி

79பார்த்தது
மணவாளக்குறிச்சியில் பைக் மோதி தொழிலாளி பலி
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே அணஞ்சகோடை சேர்ந்தவர் ஜெனிஸ்குமார்(31). கூலித்தொழிலாளி. இவரது உறவினர் நெல்லை மாவட்டம் பாப்பக்குடியை சேர்ந்தவர் சந்திரன் மகள் சந்தியா (21). நேற்று முன் தினம் மாலை இருவரும் பைக்கில் கருங்கலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி உறவினர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர். பைக்கை ஜெனிஸ்குமார் ஓட்டினார். பின்னால் சந்தியா அமர்ந்திருந்தார். பைக் மண்டைக்காடு கடந்து பரப்பற்றில் செல்லும்போது ஜெனிஸ்குமார் பைக்கை திடீரென வலது பக்கம் திருப்பினார். அப்போது எதிரே வந்த வெல்டிங் தொழிலாளர் பனவிளையை சேர்ந்த ஜஸ்டின் (39)ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் ஜஸ்டின், அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பத்தறையை சேர்ந்த மற்றொரு வெல்டிங் தொழிலாளி அனிஸ்(37)மற்றும் அணஞ்சகோடு ஜெனிஸ்குமார் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு ஜெனிஸ்குமாரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஜஸ்டின், அனிஸ் ஆகியோரை குளச்சல் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிஸ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது உறவினர் சந்தியா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி