குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு விபத்துக்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் விடிய விடிய ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று (24-ம் தேதி) இரவு மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில்களை பார்வையிட ஏராளமான பைக் உட்பட வாகனங்களில் மக்கள் சென்றனர். அப்போது குளச்சல் பகுதியில் குடில்களை பார்க்க வந்த வாலிபர்கள் சிலர் குடித்துவிட்டு பைக் ஓட்டியவர்கள், ரேசில் ஈடுபட்டவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என 24 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று குளச்சல் போக்குவரத்து காவல்துறை சார்பில் எட்டு பைக்குகள் என மொத்தம் 32 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பைக் ஓட்டி விபத்தில் சிக்கி 5 வாலிபர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.