கன்னியாகுமரியில் கடல் உள் வாங்கியதால் படகு தரை தட்டியது

55பார்த்தது
கன்னியாகுமரியில் கடல் உள் வாங்கியதால் படகு தரை தட்டியது
கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
     இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் இன்று   காலை கன்னியாகுமரி கடல் திடீர் என்று உள் வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா படகுகள் தரைதட்டி நின்றன.
    இதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  
     விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

     இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி