புதுக்கடை அருகே கைசூண்டி சந்திப்பு வழியாக கருங்கல் செல்லும் சாலையில் நேற்று (23-ம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் ஒரு மீன் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது.
உடனே ஊர் பொதுமக்கள் விரட்டிச் சென்று அந்த வாகனங்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வாகனத்தை பறிமுதல் செய்து சோதனையிட்ட போது, அதில் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய, தொற்றுநோய்களை பரப்பக்கூடிய அழுகிய மீன்கள் காணப்பட்டன. போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் டிரைவர் கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த தீபு (40), நந்து (31) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு அதே வழியாக ஒரு கூண்டு லாரி வந்தது. அதிலும் கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் லாரியை மடக்கிப் பிடித்து அதிலும் கெட்டுப்போன விஷத்தன்மையுடைய மீன்கள் காணப்பட்டன. லாரி டிரைவர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், கொத்தமங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்த அஜி (49) என்பவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.