புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி ஜெகன் மனைவி மெளனிகா (26). இவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிபடையில் துப்புரவு மேலாளராக பணி செய்து வருகிறார். இவருக்கும் காப்புக்காடு, பகுதி சாலச்சன்கோணம் பகுதி ஜெகன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு, அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாம்.
இதற்கிடையில் கடந்த ஒருவருடம் முன்பு ஜெகன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். வெளிநாடு சென்ற பிறகும் ஜெகன், மெளனிகாவிடம் போனில் சண்டை போடுவது வழக்கமாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கையறையில் தூங்க சென்றவர் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் , ஜெகன் ஏற்கனவே திருமணமாகி, முதல் மனைவி திருமணமான 2 வருடத்தில் இறந்ததாக தெரிய வந்துள்ளது. முதல் மனைவிக்கும் குழந்தைகள் இல்லை. முதல் மனைவி இறந்த பின் மெளனிகாவை காதலித்து 2-ம் திருமணம் செய்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.