குமரி மாவட்டம் வனங்கள் நிறைந்த பகுதி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால் இங்குள்ள காடுகளில் அடர்த்தி அதிகமாக இருக்கும். வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறி வரும் நிலையில், வன விலங்குகள் வாழ்விடத்தை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
பல்வேறு சமயங்களில் மலையோர குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் இருப்பதுடன், வன விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி மனித உயிர்கள் பலியாகியும் உள்ளன.
சமீப காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதில் மயிலாறு பகுதியில் 6 காட்டு யானைகள் கூட்டம், கடுக்கரை பகுதியில் ஒரு ஒற்றை யானை நடமாட்டத்தை வனத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதையடுத்து 2 குழுக்களாக பிரிந்து வனத்துறை பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தவிர கடுக்கரை கிராமத்தையொட்டி வனப்பகுதியில் ஒரு ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கீரிப்பாறை, காளிகேசம், தெள்ளாந்தி, கடுக்கரை சுற்று வட்டார மலை கிராம மக்கள் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அதிகாரி ராஜேந்திரன் அறிவிப்பு கொடுத்துள்ளார். குறிப்பாக ரப்பர் தோட்டங்களுக்கு பால் வெட்டும் தொழிலுக்கு செல்பவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.