கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ தினம் மாணவியின் பாட்டி வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு, மாணவியின் தாய் தந்தையர் முழங்கினாவிளை பகுதியை சேர்ந்த ரசல் ராஜ் (54) என்பவரின் ஆட்டோவில் மேல்மிடாரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
தெருவுக்கடை பகுதியில் சென்ற போது ஆட்டோவை நிறுத்தி தந்தை சவரம் செய்வதற்காக சலூன் கடைக்கு சென்று உள்ளார். அதேபோல் அருகில் உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்குவதற்காக மாணவியின் தாயார் சென்றுள்ளார். அப்போது மாணவி மட்டும் ஆட்டோவில் இருந்தார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ரசல்ராஜ் திடீரென மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு போயிட்டு வந்த தாய் தந்தையரிடம் மாணவி தனக்கு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவியன் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் ரசல்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கண்டு கைது செய்தனர்.