திருவட்டாறு அருகே திருவரம்பு பகுதி சேர்ந்தவர் தேசிங்கு. அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் திஜின் ( 24 )பிஎஸ்சி அக்ரி படித்துள்ளார். திஜின் அரசு வேலைக்கு முயன்று வந்துள்ளார். அப்போது அவருடைய உறவினர் மூலம் அண்டுகோடு பகுதியை சேர்ந்த ராஜன் (58) மற்றும் அவரது கூட்டாளி சிதறல் பகுதியை சேர்ந்த சகுந்தலா (55) ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக திஜினிடம் ராஜன் ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.
இதனை நம்பிய திஜின் ராஜன் மற்றும் சகுந்தலாவின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூபாய் 7 லட்சத்து 98 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். இதை அடுத்து சில நாட்களுக்கு பிறகு திஜினை டெல்லி மற்றும் கேரளாவுக்கு அழைத்துச் சென்று எழுத்து தேர்வு, மெடிக்கல் என 2 தேர்வுகள் எழுத வைத்துள்ளார்கள்.
தொடர்ந்து சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு தேர்வாகி உள்ளதாக கூறி போலி நியமன ஆணையை அளித்துள்ளனர். வேலை கிடைத்ததாக நம்பி பணியில் சேர்வதற்காக சென்னைக்கு சென்று விசாரித்த போது அது போலியாணை என தெரிந்தது.
இதையடுத்து உடனே சொந்த ஊருக்கு புறப்பட்ட தி ஜின் நேற்று திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜன் மற்றும் சகுந்தலா ஆகியோரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.