கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஏழுசாட்டு பத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி செல்வரதி (வயது 52). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. செல்வரதி அந்தப் பகுதியில் ஒரு கல்லூரி அருகில் இட்லி கடை நடத்தி வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் செல்வரதி மற்றும் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு செல்வரதியின் மகள் அனுஷா தூக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போது வீட்டின் உத்தரத்தில் செல்வரதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து அவர் தென் தாமரைகுளம் போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் செல்வரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.