கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு மாலை 4 மணியளவில் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும், நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. மாலை 6. 30 மணிக்கு கோவிலில் நடை பெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிற்பாடு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச்செய்து வாகனங்களின் முன்னால் பசு மற்றும் கன்று செல்ல 3 முறை ஸ்ரீபலி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து தாணுமாலய சாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலய சாமி கோவில் தொண்டர் அறக்கட்டளையினரும், பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.