கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன் பிடிதுறைமுக பகுதியில் கடற்கரையில் ஏராளமான மீனவர்களும், பெண்களும் திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமுட்டம் பங்குபேரவை சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆழ்கடல் இயற்கை எரிவாயு திட்டம், கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் திட்டம் போன்ற இயற்கையை அழிக்கும் அழிவு திட்டங்களை கைவிடக்கோரியும், கப்பல் விபத்துகளால் கடலும், நிலமும் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர். மீனவர்கள் தங்கள் படகுகளுடன் கடலில் இறங்கிகைகளில் கருப்பு கொடியை ஏந்தியபடி 'பாதுகாத்திடு பாதுகாத்திடு கடலையும் கடலோடிகளையும் பாதுகாத்திடு' 'அழிக்காதே அழிக்காதே கடலையும் கடற்கரையையும் அழிக்காதே' என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சின்னமுட்டம் ஊர் நிர்வாக குழுவினர் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் கமலஸ், செயலர் ஆரோக்கியம், அலெக்சாண்டர், துணைச் செயலாளர் ஜோனிதா ஆகியோர்களுடன் ஊர் உறுப்பினர்கள், விசைப்படகு சங்கம், நாட்டுப்படகு சங்கம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.