காஞ்சிபுரத்தில் மகளிர் நல வாரிய திட்ட கருத்தரங்கு
காஞ்சிபுரத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் நலனுக்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வாரியத்தின் செயல்பாடுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாள் கருத்தரங்கு, காஞ்சிபுரத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இக்கருத்தரங்கில், பெண்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மகளிர் நல வாரியம் குறித்த செயல்பாடுகளும் மற்றும் அரசின் வாயிலாக கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பெண்களிடம் கூறப்பட்டது. குறிப்பாக, நிதியை முறையாக கையாளுதல், சொத்துரிமை, குடும்ப வன்முறையிலிருந்து உரிய பாதுகாப்பு, இலவச சட்ட உதவி, அரசின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவை நல வாரியம் மூலம் பெண்களுக்கு உதவும் என தெரிவித்தனர். நல வாரியம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டார். இந்நிகழ்வில், சமூக நல அலுவலர் சியாமளா, மகளிர் நல வாரிய உறுப்பினர் கல்யாணந்தி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.