செங்கல்பட்டு நகராட்சி, அனுமந்தபுத்தேரியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்நிலையத்திற்கு, காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோய், கர்ப்பிணியருக்கான பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு, இட நெருக்கடி ஏற்பட்டதால், கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு, சுகாதாரத் துறையினர் கருத்துரு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கூடுதல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட, 60 லட்சம் ரூபாய் நிதியை, மத்திய சுகாதாரத் துறை ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்து வருகின்றனர். தற்போது, சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, மூன்று மாதத்திற்குள் முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர்.