செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியாக இருந்த போது, பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த தண்டபாணி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், வயது மூப்பு காரணமாக இறந்தார். நேற்று (ஜன.2) இவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தொகுதி எம்.பி., செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி ஆகியோர் பங்கேற்று, நடைபாதை வியாபாரிகள் 10 பேருக்கு, நான்கு சக்கர தள்ளுவண்டி, ஏழை பெண்கள் 12 பேருக்கு தையல் இயந்திரம், 10 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கினர். இதற்கு முன், கூடுவாஞ்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்டபாணி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அங்கிருந்து ஊர்வலமாக சென்று, கன்னியம்மன் கோவில் அருகிலுள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினர். இதில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.