காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை, பேராசிரியர் நகர் 2வது பகுதியில், வடிகால்வாய் வசதி இல்லாததால், காலி மனைகளில் மழைநீர் தேங்கியது.
இதனால், கொசுத்தொல்லை அதிகரித்ததால், காலி மனையில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர், மாநகராட்சியிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து, பேராசிரியர் நகர் 2வது பகுதியில் உள்ள பூங்காவை ஒட்டியுள்ள சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், கால்வாய் வெட்டிய இடத்தில் முட்செடிகள் வெட்டி போடப்பட்டு வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இதனால், இங்குள்ள பூங்கா மற்றும் கோவிலுக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாய் பள்ளம் வழியாக செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
ஓரிக்கை மிலிட்டரி சாலையில்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், மாற்று வழியாக வாகன ஓட்டிகள் பேராசிரியர் நகர் 2வது பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, சாலையின் குறுக்கே கால்வாய் வெட்டிய இடத்தில், ராட்சத குழாய் பதித்து, சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர் நகர் 2வது பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.