மறைமலை நகர் போலீசார், நேற்று அதிகாலை 4: 00 மணிக்கு, காட்டாங்கொளத்துார் ஜி. எஸ். டி. , சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக, யமஹா இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
அதில் ஒருவரை மடக்கி பிடித்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பிடிபட்டவர் மேடவாக்கம், கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த செல்வகணபதி, 21, என்பதும், தப்பிச்சென்றவர் அவரின் நண்பர் சித்தாலப்பாக்கம் ஜெயராம், 23, என்பதும் தெரியவந்தது.
செல்வகணபதி அளித்த தகவலின்படி, ஜெயராமும் பிடிபட்டார். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், இருவரும் இணைந்து, மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களிடமிருந்து யமஹா ஆர்15, யமஹா எப். இசட் ஆகிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.