காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை நடுத்தெருவில், ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை, பூர்வீக ஸ்திரவாசிகள் நிர்வகித்து வருகின்றனர்.
பூர்வீக ஸ்திரவாசிகள் மற்றும் மற்றொரு தரப்பினர் இடையே, உட்பூசல் உருவாகி உள்ளது. வாகன மண்டபம், திருக்குடை மண்டபம், அலுவலகம் போன்றவை பூட்டு போடப்பட்டு இருந்தன.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு பிரிவினர் ரீட் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, 'கடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தியதை போல, இரு பிரிவினர் இணைந்து வைகுண்ட ஏகாதசி திருவிழாவை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், இருதரப்பினர் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, இருதரப்பினரையும் அழைத்து, வாலாஜாபாத் தாசில்தார் சுபபிரியா மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்தை நடத்தினர்.
ஒரு தரப்பில் விஸ்வநாதன் என்பவரையும், மற்றொரு தரப்பில் பழனி என்பவரையும், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் இணைந்து, கோவில் பூட்டுகளை அகற்றிவிட்டு திருவிழாக்களை நடத்தலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. "