காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம், ஆற்ப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர், எம். சாண்ட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஜல்லி, மணல் போன்ற கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கிராமங்கள் வழியாக இயக்கப்படுகின்றன.
கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளில், சில அதிக லோடு மற்றும் தார்ப்பாய் போர்த்தாமல் இயங்குகின்றன. இதனால், எம். சாண்ட் மணல் சாலைகளில் பரவுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து, தொடர்ந்து புகார் எழும்பியதையடுத்து, வாலாஜாபாத் வட்டாட்சியர் கருணாகரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர், காஞ்சிபுரம்- - உத்திரமேரூர் சாலை, ஆற்ப்பாக்கம் பகுதியில், விதிமுறைகளை மீறும் வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதிக லோடு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் தார்ப்பாய் போர்த்தாமல் எம். சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளை மடக்கி வழக்குப்பதிவு மற்றும் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அப்போது, அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி சென்ற 3 லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, 2. 48 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.