அச்சிறுபாக்கம் அருகே, அமணம்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், பள்ளிக்கூட தெரு மற்றும் பெருமாள் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சில மாதங்களாக, தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்தடை, அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்படுவதால், மின்சாரம் இல்லாமல் இப்பகுதிவாசிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால், டிவி, கிரைண்டர், பிரிஜ், வாஷிங்மெஷின், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியமான மின் சாதனப் பொருட்களை பயன்படுத்த முடியாமல், அப்பகுதி பெண்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடிவதில்லை எனவும், குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து, மின்வாரிய அலுவலகத்திற்கும், முதல்வரின் தனி பிரிவுக்கும், பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் வெகுண்டெழுந்த அமணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்டோர், நேற்று அச்சிறுபாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து, அச்சிறுபாக்கம் போலீசார் மற்றும் மின்வாரியத் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மின் வினியோக பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, சீராக மின்சாரம் வழங்கப்படும் என, மின் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததால், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.