உத்திரமேரூர் ஒன்றியம், சித்தனக்காவூர் ஊராட்சியில், முத்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டின் கீழ், உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் காட்டுவா மரங்கள் மற்றும் புளியன் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து, பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கோவில் நிலத்தில் இருந்த அம்மரங்களை, அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர், கூலி ஆட்கள் வாயிலாக வெட்டி விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சித்தனக்காவூர் முத்தீஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் ராஜசேதுபதி கூறியதாவது:
சித்தன்னக்காவூர் முத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில், பல மரங்கள் வளர்ந்திருந்தன.
அம்மரங்களை, இப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் என்பவர் கோவில் நிர்வாகம் மற்றும் வருவாய் துறையிடம் அனுமதி பெறாமல், 15, 000 கிலோ எடை கொண்ட மரங்களை வெட்டி விற்பனை செய்து விட்டார்.
இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆய்வாளர் மற்றும் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ஆகியோரிடத்தில் புகார் மனு அளித்துள்ளேன்.
எனவே, அனுமதியின்றி கோவில் மரங்களை வெட்டி விற்பனை செய்த, சித்தனக்காவூர் ஊராட்சி தலைவர் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.