காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு, வரதராஜபுரம் தெரு, லாலா குட்டை தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவினர் கூறியதாவது:
எங்கள் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரு நாட்களாக வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் உள்ள கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், இரு நாட்களாக குளிக்காமல் உள்ளோம். இயற்கை உபாதை கழிக்க பொது கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
மேலும், பாதாள சாக்கடையில் உள்ள கழிவுநீர் வீட்டிற்குள் ‛ரிடர்ன்' ஆவதால், துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. வீட்டு பிரதான வாசலில் கழிவுநீர் தேங்குவதால், இரு வீட்டினர் தங்களது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியில் சென்று விட்டனர். கழிவுநீரால் வீட்டை காலி செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.