போலி நகைகளை அடமானம் வைத்த 3 பேர் கைது

1933பார்த்தது
போலி நகைகளை அடமானம் வைத்த 3 பேர் கைது
காஞ்சிபுரம் காரைப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி, கம்மவார்பாளையம் இந்தியன் வங்கி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இந்தியன் வங்கி ஆகிய மூன்று வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை சமீபத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, 2023 மே முதல் டிசம்பர் வரையிலான இடைபட்ட காலகட்டத்தில், இந்த மூன்று வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் தங்க முலாம் பூசி அடமானம் வைக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
போலி நகைகளை மோசடி செய்து அடமானம் வைத்தவர்களின் விபரங்களை தயார் செய்து, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராமன், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தார். அவரது புகாரையடுத்து, போலி நகைகளை அடமானம் வைத்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

காரைபேட்டை வங்கி கிளையில் 1 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயும், சங்கரடம் அருகில் உள்ள வங்கி கிளையில் 66 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், கம்மவார்பாளையம் இந்தியன் வங்கியில் 35 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும் என, மொத்தம் 2. 53 கோடி ரூபாய் மோசடியாக போலி தங்க நகை அடகு வைத்து பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், ராணிப்பேட்டை மாவட்டம், உளியநல்லுாரைச் சேர்ந்த மேகநாதன், 35; நெமிலி தாலுாகா, பனப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ், 38, காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் குமார், 38, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி