செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் செயல்படும், சி.எஸ்.பி., தனியார் வங்கி கிளை மேலாளர் சுதர்சன், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் நேற்று (டிச.28) ஒரு புகார் அளித்தார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், (51), அவரது நண்பர் பாஸ்கரன், (55), ஆகியோர் இணைந்து, எங்கள் வங்கியில் கணக்கு தொடங்கினர். தொடர்ந்து அவர்கள், தங்க நகைகளை வழங்கி கடன் பெற்றனர். மொத்தம் 214 கிராம் தங்க நகைக்கு, 11 லட்சத்து 45 ஆயிரத்து 300 ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். வங்கியில் கணக்கு தணிக்கை நடந்த போது, பாஸ்கரன் மற்றும் சுரேந்திரன் பெயரில் உள்ள அனைத்து நகைகளும் போலியானவை என தெரிந்தது. போலி நகைகளை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
புகாரை பெற்று வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், தலைமறைவாக இருந்த சுரேந்திரன் மற்றும் பாஸ்கரனை, நேற்று மாலை கைது செய்தனர். அவர்கள் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவர்களை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிறையில் அடைத்து, இது தொடர்பாக விசாரிக்கின்றனர்.