கூடுவாஞ்சேரி, நந்திவரம், மல்லேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா இவர் மீது, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மட்டும் ஏழு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறைச் சென்றுள்ளார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அப்துல்லா, தன் நண்பர்களோடு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்அடிப்படையில் அப்துல்லாவின் நடவடிக்கைகளை மறைமுகமாக போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நண்பர்களான ராஜிவ் காந்தி நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த வாளை என்கிற விஷ்ணு (21) மற்றும் ராணி அண்ணாநகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்த தாமஸ் (24) ஆகியோருடன் சேர்ந்து, நந்திவரம் ஏரி அருகே அப்துல்லா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது, திடீரென சுற்றிவளைத்த போலீசார், அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.