நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் சாலை உள்ளது. இந்த சாலையை வழியாக, வண்டலூர் தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலையை நந்திவரம், கோவிந்தராஜபுரம், நாராயணபுரம், காமராஜபுரம், ராணி அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாசிகள் பயன்படுத்தி செல்கின்றனர்.
அரை கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையை சீரமைப்பதற்காக, பல மாதங்களுக்கு முன் ஜல்லிக் கற்கள் கொட்டிய நிலையில், தற்போது வரை சீரமைக்கவில்லை.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், வண்டலூர் தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டதில் இருந்து, அதிகளவிலான மக்கள் வந்து செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் வரும் போது, ஜல்லிக் கற்களால் சறுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.