செங்கல்பட்டு சக்தி வினாயகர் கோவில் எதிரில், பழைய கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளது. புதிய கலெக்டர் அலுவலகம் வேண்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் அங்கு மாற்றப்பட்டது.
பழைய அலுவலக வளாகத்தில், தற்போது சப் - கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தாசில்தார் அலுவலகத்திற்கு, தினுமும் பட்டா, ரேஷன் அட்டை, ஜாதி சான்று உள்ளிட்டவற்றை பெற, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் மக்களின் குடிநீர் தேவைக்காக, நிர்வாகம் சார்பில் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, குழாய்கள் பொறுத்தப்பட்டு உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம், பல மாதங்களாக பழுதடைந்து வீணாகி வருகிறது.
இங்கு, தண்ணீர் குடிக்க வைக்கப்பட்டு உள்ள டம்ளர்கள் துருப்பிடித்து, குப்பை நிறைந்து உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையும், ஒட்டடை படிந்து காணப்படுகிறது.
மேலும், இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பெண்கள், முதியவர்கள் நீண்ட துாரம் நடந்து சென்று, கடைகளில் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.