செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் கிழக்கு பகுதியில், விமானப்படை பயிற்சி மைய சுற்றுச்சுவரை ஒட்டி, பெரிய ஏரி உள்ளது. மழை காலத்தில், இவ்வேரி நிரம்பினால், இரும்புலியூர் அருள் நகர் அருகேயுள்ள கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறி, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, மேற்கு தாம்பரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும்.
இதற்கு தீர்வாக, ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், குடியிருப்புகளை சூழாத வகையில், இரும்புலியூர் - ரயில்வே லைன் - முடிச்சூர் சாலை வழியாக சென்று, அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், 12,000 அடி நீளத்திற்கு, 96 கோடி ரூபாய் செலவில் மூடுகால்வாய் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. முதல் கட்டமாக, இரும்புலியூர் ஏரி முதல் பழைய ஜி.எஸ்.டி. சாலை வரை கால்வாய் கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, இரும்புலியூர் டி.டி.கே. நகர் சுரங்கப்பாதை முதல் தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக, 1 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இக்கால்வாய், 9 அடி உயரத்தில் கட்டப்படுவதால், நேற்று காலை, அதற்காக பள்ளம் தோண்டும் போது, அவ்வழியாக செல்லும் பாலாறு குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறியது. தொடர்ந்து வெளியேறி, 10 லட்சம் லிட்டர் வீணானது.