சர்வதேச சுற்றுலா தினமாக, செப். , 27ம் தேதி, உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையடுத்து நேற்று, (செப் 28) தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரத்தில், சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில், விமரிசையாக கொண்டாடப்பட்டது. சுற்றுலாத் துறையினர், சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில், கடற்கரை கோவில் பகுதியில், சர்வதேச பயணியருக்கு மாலை அணிவித்து, குங்குமம், சந்தின திலகமிட்டு வரவேற்றனர். தமிழக நாட்டுப்புற கலைஞர்கள், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனம் மற்றும் ராஜஸ்தான் கலைஞர்கள் அவர்களின் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பயணியரும் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
சப் - கலெக்டர் நாராயணசர்மா, விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்தார். அதில், அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலை கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரி, பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர், சுற்றுலா அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். சென்னை பைக்கர்ஸ் கிளப் குழுவினர், இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து, தனியார் விடுதியில் தேசியக்கொடியை போல் வண்ண பலுான்கள் பறக்கவிட்டு, விழா நோக்க கருப்பொருள் கேக் வெட்டினர்.
பல்வேறு விடுதிகளின் நிர்வாகிகள், சுற்றுலா மேம்பாடு, மனம் அமைதி அடைவது, சுற்றுலாவால் பொருளாதார வளர்ச்சியடைவது குறித்து பேசினர்.