திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, உலக மூளை முடக்குவாத தினத்தையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தொடர்பு அணுகல் மற்றும் கற்பித்தல் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கு, காணொலி மூலம் நடந்தது.
இந்த கருத்தரங்கில், லக்னோவில் இயங்கும் 'ஸ்பார்க்
இந்தியா' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் அமிதாப் மல்ஹோத்ரா பங்கேற்றார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கு, பெருமூளை முடக்குவாதத்தின் ஆரம்ப கால தலையீடு மற்றும் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் நடந்தது.
அதேபோல், மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில், நிறுவன இயக்குனர் நசிகேதா ரவுட், துணைப்பதிவாளர் - பொறுப்பு அமர்நாத், அலுவலர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.