மாமல்லபுரத்தில் குறுகிய இடத்தில் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, ஒரே நேரத்தில் சில பேருந்துகளையே நிறுத்த இயலும்.
கூடுதல் பேருந்துகள் நிறுத்த இடமின்றி அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. கூரையற்ற திறந்தவெளியில், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர், வெயில், மழையில் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில், முக்கிய சாலைகள் சந்திப்பதால், பேருந்து நுழையும்போதும், வெளியேறும்போதும் நெரிசல் ஏற்பட்டு,
போக்குவரத்து முடங்குகிறது.
புதிய பேருந்து நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவெடுத்து, திருக்கழுக்குன்றம் சாலையில், பகிங்ஹாம் கால்வாய் அருகில், 6. 80 ஏக்கர் இடத்தை, கடந்த 1992ல் தேர்வுசெய்தது.
வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் அமைக்கவும் ஏற்பாடானது.
பேருந்து நிலையம் வேறிடம் மாறினால், வர்த்தகம், தொழில் பாதிக்கப்படும் என கருதிய வியாபாரிகளின் எதிர்ப்பால் நீண்டகாலம் முடங்கியது.
பின், மத்திய பொதுப்பணித்துறை மூலம் செயல்படுத்த, கடந்த 2016ல், 15 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன் பின்னும் மூன்று ஆண்டுகளைக் கடந்து, 2019ல் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2020ல் மண் பரிசோதனை செய்யப்பட்டும், கட்டுமானப்பணி துவங்காத நிலையில், மத்திய பொதுப்பணித் துறையும், ஒப்பந்தத்தை கைவிட்டு விலகியது.